மனைவியை இதமாக நெஞ்சில் தாங்கியிருந்த சத்யன்…. அவளின் உச்சந்தலையில் தனது தாடையை ஊன்றி “ மான்சி இப்போ வலி பரவாயில்லையா?” என்று கவலையாக கேட்க…. “ சுத்தமா வலியே இல்ல மாமா… நீ உன் கையை என் வயித்துல வச்சுக்கோயேன்” என்றதும் ..
சத்யன் அவள் இடுப்பில் இருந்த தனது கையை எடுத்து வயிற்றில் சுற்றி அணைத்தார்ப் போல் வைத்துக்கொண்டான் “ மாமா “ என்று மான்சி அழைக்க…. ஏதோ ரகசியம் சொல்லப்போகிறாள் என்று அவள் குரலே சொன்னது…. “ என்னடா?” என்ற சத்யனின் குரல் அதைவிட ரகசியமாக இருந்தது… “ எனக்கு இப்போ பாப்பா வந்தது உனக்கு பிடிக்கலையா?” என்ற மான்சியின் கேள்வியில் சத்யன் சற்று குழம்பித்தான் போனான்…
“ என்ன மான்சி இப்படி கேட்கிற? எனக்கு ரொம்ப சந்தோஷம்தான் மான்சி… உனக்கு ஏன் திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்?” குழப்பமான குரலில் கேட்டான் அவன் நெஞ்சில் இருந்தவாறு தலையைத் திருப்பி அவன் முகத்தைப் பார்த்து “ நேத்து நீ ஒரு முத்தம் கூட வயித்துல குடுக்கவே இல்லை மாமா… அதான் உனக்கு பிடிக்கலையோன்னு கேட்டேன்” என்று குசுகுசுவென மான்சி சொல்ல… சத்யனுக்கு அவள் மனம் புரிந்தது…
எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் அவளின் குழந்தை மனமும் புரிந்தது…. தானும் இதுவரை குழந்தையைப் பற்றி பேசாதது சற்று உறுத்தலாக இருந்தது.. இனிமேல் அவள் வருந்தும்படி நடக்கக்கூடாது என்று நினைத்து இவனும் அவள் காதருகே குனிந்து “ தேவதை மாதிரி பொண்டாட்டியைப் பார்த்ததும் குழந்தை மறந்துபோச்சு… இனிமே மறக்காம மொதல்ல பாப்பாவுக்கு தான்” என்று ரகசியம் சொன்னபடி. அவள் வயிற்றை மென்மையாக வருடினான் “ ஆங் அதெல்லாம் வேணாம் வேணாம்.. மொதல்ல எனக்குதான்… அப்புறம்தான் பாப்பாவுக்கு.. சரியா?”
என்று பதட்டமான குரலில் மான்சி கூறியதும்.. அவள் காயத்தை மறந்து சத்யனின் அணைப்பு இறுகியது.. குனிந்து அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டு மூக்கால் உரசி “ சரிடா உனக்குத்தான் பர்ஸ்ட்” என்று கொஞ்சினான் “ மாமா நேத்து ஞாபகமாவே இருக்கு மாமா ? எப்ப வீட்டுக்குப் போவோம்னு இருக்கு? ” ஏக்கத்துடன் வருந்தினாள் மான்சி அணைப்பை இலகுவாக்கி இன்னும் கொஞ்சம் முன்னால் குனிந்து மெல்லிய குரலில் “ ம்ம் எனக்கும்தான் வெளியப் படுத்தா தூக்கமே வரலை…
நேத்து நடந்ததை நெனைச்சிகிட்டே கண்மூடிக் கிடந்தேன்” என்ற சத்யனின் பதிலில் அவனது ஏக்கமும் ஒலித்தது மான்சி எதுவுமே பேசவில்லை… இருவருமே அமைதியானார்கள்.. ‘ ஒருநாள் இரவு மட்டுமே அனுபவித்த சொர்க்கம் மறுநாள் பறிபோனதை இருவரும் ஒரே மாதிரியாக மனதில் எண்ணினார்கள்… இன்னும் ஏதாவது பேசி அவள் ஏக்கத்தை தூண்டிவிடக்கூடாது என்று சத்யன் அமைதியானான்… தன்னால் மாமாவின் ஏக்கத்தை போக்கமுடியவில்லையே என்று மான்சி அமைதியானாள்…
இருவருமே தங்களின் இணையைப் பற்றிதான் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.. தன் வயிற்றை வருடிய சத்யனின் கையை மான்சி அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள் சற்றுநேரத்தில் அங்கே வந்த ஜோயல் “ சார் நான் கிளம்பனும்.. மான்சியோட ரிப்போர்ட் ரெடி பண்ணி வச்சிட்டேன்… நீங்க வெளியப் போய் வெயிட்ப் பண்ணுங்க… டாக்டர் வரவும் கேட்டுகிட்டு ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க” என்ற கூறியபடி சத்யன் நெஞ்சில் இருந்த மான்சியை அக்குளில் கைகொடுத்து தன் மார்போடு அணைத்துப் பிடிக்க.. சத்யன் சட்டென்று எழுந்துகொண்டு மான்சியின் முதுகை தாங்கி படுக்கையில்க் கிடத்தினான்
“ சரி மான்சி நான் வெளிய வெயிட்ப் பண்றேன்டா” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு விலகிய சத்யனின் கையை தனது தளிர்க்கரத்தால் பற்றிய மான்சி வார்த்தைகளின்றி பார்வையால் தனது ஏக்கத்தை சொல்ல… அந்த நிமிடம் சத்யன் அங்கே ஜோயல் இருப்பதை மறந்து சட்டென்று குனிந்து மான்சியின் உதடுகளை கவ்விக்கொண்டான்… இந்த திடீர் முத்தத்தில் ஜோயல் தான் தடுமாறிப் போனாள்… சட்டென்று சுவர் பக்கமாக திரும்பியவள் “ ம்ம் போதும் சத்யன் சார் நானும் இங்கதான் இருக்கேன்” என்று குறும்புடன் கூறியதும் சத்யன் சுதாரித்து விலகினான்…
அதற்குமேல் நிற்க்காமல் விலகி வெளியேப் போனான்.. சற்றுநேரத்தில் தனது கைப்பையுடன் வெளியே வந்த ஜோயல் சத்யனைப்பார்த்து புன்னகையுடன் தலையசைத்துவிட்டு கிளம்பினாள்…ஐசியூவில் இருந்து வராண்டாவுக்குத் திரும்பி நடந்தவள் எதிரே வந்து நின்ற வீரேன் நெற்றி காயத்தைத் தொட்டுக்காட்டி “ இன்னிக்கு பிளாஸ்டர் மாத்தி மருந்து போடனும்னு சொன்னீங்களே” என்று அவள் நேற்று கூறியதை ஞாபகப்படுத்தினான்..
நிமிர்ந்து அவன் முகத்தை கூடப் பார்க்காமல் காயங்களுக்கு மருந்து போடும் அறையை கைநீட்டி காட்டி “ அங்க ஒரு நர்ஸ் இருப்பாங்க.. அவங்ககிட்ட சொன்னீங்கன்னா மருந்து போடுவாங்க” என்று கடமையாய் பதில் சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தவளை தொடர்ந்த வீரேன் “ அப்போ நீங்க மருந்து போடமாட்டிங்க?” என்று கேட்க… முடியாது என்பதுபோல் தலையசைத்தாள் ஜோயல்.. “ எனக்கு நீங்கதான் மருந்து போடனும் வேற யாரும் வேணாம்” வீரேனேன் குரல் பிடிவாதமாக ஒலிக்க..
“ அது உங்க இஷ்டம்” என்றுவிட்டு ரிசப்ஷனை நோக்கி சென்றவள் அங்கே ஏதோ பேசிவிட்டு வெளியே வந்து தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வீரேன் மீதான கோபத்தை தனது வண்டியிடம் காண்பித்து சரேலென பறந்தாள் … அப்போது சத்யனின் கார் வந்து நிற்க்க… அதிலிருந்து பஞ்சவர்ணம். செல்வி. ராமையா மூவரும் இறங்கினார்கள்… உள்ளூர் கார் டிரைவர் ஒருவர் காரை ஓட்டி வந்திருந்தார்… பஞ்சவர்ணமும் ராமைய்யாவும் முன்னால் போய்விட…
செல்வி பொருட்கள் நிறைந்த இரண்டு பெரிய பைகளை சுமந்துகொண்டு வர எதிரே வேகமாக வந்த தேவன் அதில் ஒன்றை வாங்கிக்கொண்டான் .. “ என்ன செல்வி இவ்வளவு எடுத்துகிட்டு வந்திருக்க?” என்று கேட்க… “ பின்ன…. பத்துநாளாவது தங்கனும்னு அப்பா சொல்லுச்சு… அதனால இந்த பேக்குல சின்னய்யா.. மான்சியம்மா துணி அவங்களுக்கு தேவையானது எல்லாம் இருக்கு.. அதான் பேக்கு பெரிசா இருக்கு ” என்று விளக்கம் சொன்னாள்
செல்வி “ அப்போ இவ்வளவு பெரிய பைல என் டிரஸ் இருக்கா? ஏன் இவ்வளவு எடுத்துட்டு வந்த?” என்றவனை முறைத்த செல்வி “ ஓய் என்னாத்துக்கு இப்ப நோண்டி நோண்டி கேட்டுகிட்டு இருக்க?” என்றதும்.. சற்றே அசடுவழிந்த தேவன் “ இல்ல உன்னோட துணி எதுவுமே எடுத்துட்டு வரலையே அதான் கேட்டேன்? ” என்றான்… அவன் முகத்தைப் பார்த்துவிட்டு பிறகு சுற்றுமுற்றும் பார்த்து யாரும் தங்களை கவனிக்கவில்லை என்றதும் அவனை நெருங்கி நின்று
“ இன்னொரு பை இல்லாதப்பவே தெரிய வேனாம்? நீ வச்சிருக்க பைலதான் என்னோடதும் இருக்கு… சரியான டியூப்லைட்யா நீ” என்று செல்லமாய் அவன் கன்னத்தை தட்டினாள் அவள் கைகளை கப்பென்றுப் பற்றி இழுத்த தேவன் “ செல்வி ரெண்டுபேர் டிரஸ்ம் ஒன்னாவா கொண்டு வந்த?” என்ற அவன் கேள்வியில் இருவருக்கும் ஏதோ நிச்சயதார்த்தமே நடந்துவிட்டது போன்ற ஆர்வம் .. “ ம்ம் “ என்று வெட்கமாய்ச் சிரித்தவளை ஆசையாய் நெருங்கிய தேவன்…
“ செல்வி ஒரு வாரத்துக்கு நான் உன் கூடவே இருக்குறதை நெனைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு… நீ எங்க போனாலும் நான் உன் கூடவே இருக்கனும் செல்வி” என்று காதலாய் பேசிய தேவன் சூழ்நிலை மறந்து செல்வியின் விரல்களைப் பிடித்து முத்தமிட்டான்.. அவன் வார்த்தைகள் மனதை என்னவோ செய்ய…
“ நான் போற இடத்துக்கு நீ வரக்கூடாது…. நீ போற இடத்துக்குத்தான் நான் வரனும்” என்றாள்… தங்களை மறந்து இருரும் பேசிக்கொண்டிருக்க… ஜோயல் போனதையேப் பார்த்துக்கொண்டு இருந்த வீரேன் அந்த வராண்டாவின் மறு திருப்பத்தில் இருந்ததை இருவருமே கவனிக்கவில்லை… இவர்களின் பேச்சை கவனித்துவிட்டு ஆச்சர்யத்துடன் எட்டிப்பார்த்த வீரேனை முதலில் கவனித்தது செல்விதான்… தேவனை நெருங்கி நின்றிருந்தவள் அவசரமாய் விலகினாள்..
அடுத்ததாக தேவனும் தன் அண்ணனைப் பார்த்துவிட்டு சங்கடமாக நெளிந்தான்… இருவரையும் நெருங்கிய வீரேன் “ ஓகோ கதை அப்படிப் போகுதா?“ என்று சொல்லிவிட்டு லேசாக புன்னகைக்க… தேவன் அதற்க்குமேல் அங்கே நிற்காமல் பேக்கை எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டான் செல்வி மட்டும் சற்று தயங்கி நின்றாள்…. வீரேன் யோசனையுடன் அவளைப்பார்த்து
“ ஏன் செல்வி எங்க மாமாவுக்கு உங்க விஷயம் தெரியுமா?” என்று கேட்க… செல்வி தயக்கமின்றி அவனைப்பார்த்து “ முந்தாநாள் நைட்டு சின்னய்யா எங்க வீட்டுக்கு வந்து உங்கப்பா அம்மா சொன்னாங்கன்னு என்னைய உங்களுக்கு பொண்ணு கேட்டாருங்க…. எங்க வீட்டுல எல்லாரும் சின்னய்யாவோட இஷ்டம்னு சொல்லிட்டாங்க… அதோட அவரும் வீட்டுக்கு கிளம்பிட்டாரு…
பொறவு நான் அவர் பின்னாடியே ஓடி வந்து எல்லாத்தையும் சொன்னேன்… அவ்வளவுதான நீ தைரியமா வீட்டுக்குப் போ எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டுப் போனாரு… ஆனா மறுநாள் இந்த மாதிரி ஆகிபோச்சு” என்றவள் கலங்கிய கண்களை புறங்கையால் துடைத்துக்கொண்டாள்