சில்லென்று குத்தூசியை போல் முதுகெலும்பை ஊடுருவும் குளிர்ந்த காற்று வீசும் அதிகாலை,, அந்த குளிருக்கு பயந்து மரங்களும் செடி கொடிகளும் கூட தலையசைக்க மறுத்து சத்தமின்றி அமைதி காக்க… சில்வண்டுகளின் ரீங்காரத்தை தவிர அவ்வப்போது ஒன்றிரண்டு வாகனங்களின் சத்தமும் மட்டுமே கேட்டது
கோவை ரயில்நிலையம் இரவுநேர சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ டிரைவர்கள்,, ரயில் நிலையத்துக்கு வெளியே சாலையின் ஓரமாக குப்பைகளை எரித்து அந்த கடும் குளிருக்கு இதமாக குளிர்காய்ந்து கொண்டிருந்தனர்,,
கார் பார்க்கிங்கில் வந்து நின்ற வேகன் ஆர் காரில் இருந்து இறங்கிய சத்யன்,, பின்புறம் வந்து கதவை திறந்துவிட.. எழுபது வயது மதிக்கத்தக்க பழுத்த பழம் போல ஒரு பெண்மணியும்,, அவரை தொடர்ந்து இறங்கினாள் இன்னொரு ஐம்பது வயது பெண்ணும்
பாட்டியின் கையை பிடித்து இறக்கிவிட்ட சத்யன்,, பின் கதவை திறந்து இரண்டு லெதர் பைகளை எடுத்து வெளியே வைத்துவிட்டு காரை லாக் செய்தான்,, கீழேயிருந்த பைகளில் ஒன்றை கையில் எடுத்தான்
அவசரமாக அவனை நெருங்கிய அந்த ஐம்பது வயது பெண் “ தம்பி பையை குடுங்க நான் எடுத்துக்கிறேன்” என்று அவன் கையில் இருந்த பையை வாங்க முயன்றாள்
“ வேனாம் ராஜம்மா நீ சின்ன பையை எடுத்துக்க,, அப்புறம் பாட்டியை கவனமா பார்த்துக்கங்க உங்களை நம்பித்தான் அவங்களை அனுப்புறேன்,, வேலாவேலைக்கு கரெக்டா மருந்து மாத்திரைகளை குடுங்க,, ஏதாவது டவுட்னா எனக்கு போன் பண்ணுங்க,, நான் குடுத்த மொபைல் போனை எப்பவுமே கையில வச்சுக்குங்க,, மாமா வீட்டுல பாட்டிக்கு ஏத்த மாதிரி சமையல் பண்ணி குடுக்கச்சொல்லுங்க,, அப்படியில்லேன்னா நீங்களே சமையல் பண்ணுங்க,, போய் இறங்கினதும் என்னேரமா இருந்தாலும் எனக்கு கால் பண்ணி சொல்லுங்க,, என்னோட நம்பரை தமிழில் என் பெயர் போட்டு சேவ் பண்ணி வச்சிருக்கேன் பாருங்க” என்று சொல்லிகொண்டே சத்யன் பாட்டியின் தோளில் கைப்போட்டு அணைத்தவாறு முன்னால் நடக்க……
அவன் சொல்வதற்க்கெல்லாம் “ சரிங்க தம்பி,, சரிங்க தம்பி” என்று பின்பாட்டு பாடிக்கொண்டே வந்தாள் ராஜம்மா
“ டேய் சத்யா இதையே இன்னிக்கு காலையிலேர்ந்து பத்தாவது முறையா சொல்ற,, பாவம் ராஜமும் தலையாட்டி தலையாட்டி நொந்து போய்ட்டா,, இன்னும் ஒரு வாட்டி சொன்னே நீயாச்சு உன் பாட்டியாச்சுன்னு ஓடப்போறா பாரு” என்று பாட்டி குறும்புடன் சொல்ல
“ அய்யோ நா ஏம்மா அப்படி சொல்லப்போறேன்,, தம்பி உங்கமேல வச்சிருக்க பாசம்தான் இந்த கோயமுத்தூருக்கே தெரியுமே,, இந்த காலத்து புள்ளைங்க யாரும்மா இந்த மாதிரி பெரியவங்கக்கு மரியாதை குடுக்குறாங்க,, ஏய் பெரிசுன்னு நக்கல்தான் பண்றாங்க” என்று ராஜம்மா சத்யன் தன் பாட்டி மீது வைத்திருக்கும் பாசத்தை தன் வார்த்தைகளில் சொன்னாள்
சத்யன் சிரித்தபடி பாட்டியுடன் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் கிடந்த பெஞ்சில் அமர்ந்தான்,, அவனருகே பையை வைத்துவிட்டு “ தம்பி நான் போய் உங்களுக்கு பிளாட்பாரம் டிக்கெட் வாங்கிட்டு வர்றேன்,, நீங்க அம்மாகூட பேசிகிட்டு இருங்க ” என்று ராஜம்மா போய்விட
சத்யன் பாட்டியின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு “ ஏன் பாட்டி இதோ இருக்குற திருச்சிக்கு கார்ல போயிருக்கலாம்ல,, ரயில்ல தான் போவேன்னு இவ்வளவு பிடிவாதம் பண்றியே பாட்டி” என்று சலிப்புடன் சொன்னான்.
“ இல்லடா கண்ணா பாட்டிக்கு வயசாயிருச்சுல்ல,, ரயில்ல போனா பாத்ரூம் போகக்கொள்ள வசதியா இருக்கும்,, அதோட உனக்கும் நாளைக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னயே சத்யா,, அதை மொதல்ல கவனி,, அப்புறம் உன் தங்கச்சி அனிதா நேத்து வந்து யாரோ அவ ப்ரண்ட்டுக்கு நம்ம கம்பெனியில் வேலை வேனும்னு கேட்டாளே, அதுக்கு ஏற்பாடு பண்ணு சத்யா,, அனிதா இதுவரைக்கும் உன்கிட்ட எதுவுமே கேட்டதில்லை,, முதன்முதலா கேட்டுருக்கா அதை தட்டிகழிச்சுடாதே சத்யா” என்று பாட்டி சொன்னதும்
சட்டென்று முகம் மாறிய சத்யன் எதுவுமே சொல்லாமல் தலைகுனிந்து அமர்ந்தான்,,
அவன் தலைமுடியை தன் விரல்களால் கோதிய பாட்டி “ என்னப்பா அமைதியாயிட்ட,, பாவம்பா அனிதா,, அவ என்ன தப்பு பண்ணா,, அவ உன் தங்கச்சிங்கறத உன்னால மறுக்கமுடியாது ராசா,, எல்லாம் காலப்போக்குல சரியாகனும் சத்யா,, நீ இன்னும் பழசையெல்லாம் மனசுல வச்சுகிட்டு வேதனைப்படாதே ராசா” என்று பாட்டி கலங்கிய கண்களுடன் பேச………..
தலைகுனிந்து அமர்ந்திருந்த சத்யன் “ நிச்சயமா அனிதாவோட ப்ரண்ட்க்கு வேலைக்கு ஏற்பாடு பண்றேன் பாட்டி,, ஆனா நான் பழசையெல்லாம் மறக்கமாட்டேன் பாட்டி” என்று பாட்டியிடம் தீர்மானமாக சொன்ன சத்யன் சேரில் இருந்து எழுந்துகொண்டான்
மேற்க்கொண்டு குடும்பம் பற்றி அவனிடம் எதையும் பேசாது “ திருச்சிக்கு போற ரயில் வர இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு சத்யா” என்று கேட்ட பாட்டி
“ இன்னும் அரை மணிநேரம் இருக்கு பாட்டி,, இப்போ சென்னையில் இருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் வரும் அதுக்கு அப்புறம்தான் நீங்க போற ட்ரைன் வரும் ,, என்று பாட்டிக்கு விளக்கம் சொன்ன சத்யன்,, நெற்றியில் விழுந்த சிந்தனை முடிச்சுகளுடன் பிளாட்பாரத்தில் நடந்தான்
அப்போது ஆலப்பி எக்ஸ்பிரஸ் வருவதற்கான அறிவிப்பு வர,, அதை தொடர்ந்து சிறிதுநேரத்தில் ரயிலும் வந்தது,, சத்யன் நின்றிருந்த இடத்தில் வந்து நின்ற இரண்டாம் வகுப்பு பெட்டியில் இருந்து சிலர் இறங்கி போனார்கள்
இறங்கியவர்கள் தங்களின் சுமைகளை சுமந்துகொண்டும்,, இழுத்துக்கொண்டும் விறுவிறுவென்று நடக்க,, கடைசியாக இறங்கிய ஒரு பொண்ணும் பையனும் மட்டும் ரயிலை விட்டு இறங்கி எங்கும் போகாமல், சத்யனின் பாட்டி அமர்ந்திருந்த இடத்துக்கு எதிரே கிடந்த வரிசை சேரில் அமர்ந்து கொண்டார்கள்
பிளாட்பாரத்தில் நடந்தபடி சத்யன் அவர்களை கவனித்தான்,, அந்த பெண் அழகியாக இருந்தாலும் ஒடிந்து விழுந்துவிடுவது போல் ஒல்லியாக இருந்தாள்,, முகம் ஒரு மாசு மருவின்றி துடைத்து வைத்த வெங்கல பாத்திரம் போல் பளபளப்பாக இருந்தது,, ஆனால் அந்த கண்களில் ஒரு பதட்டம், முகத்தில் ஒரு இனம் புரியாத சோகம் இருந்தது
அவளுடன் இருந்தவனுக்கு இவளைவிட இரண்டு அல்லது மூன்று வயதுதான் அதிகமாக இருக்கும்,, அவனும் ஒல்லியாக இருந்தான்,, அந்த பெண் அவனிடம் குனிந்து ஏதோ சொல்ல,, உடனே அந்த பையன் அவள் நெற்றியை பிடித்து அழுத்திவிட்டான்,, பிறகு அந்த பக்கமாக போன காபி விற்பவனை கூப்பிட்டு ஒரு கப் காபி வாங்கி அவளிடம் கொடுத்தான்..
அவள் காபி கப்பை இரண்டு கைகளில் பிடித்துக்கொண்டு சுடசுட காபியை குடித்தாள்,, அந்த பையன் அவள் முகத்தையே பார்த்தான்,, அவன் பார்வையில் அளவுகடந்த கரிசனம் தெரிந்தது,, அவனே காலி கப்பை வாங்கி குப்பைக் கூடையில் போட்டுவிட்டு வந்து அவளருகில் அமர்ந்து கொள்ள,, அவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்,, மறுபடியும் அவள் தலையை இதமாக அமுக்கிவிட்டான் அந்த பையன்,
அவர்களின் நடவடிக்கைகளை மறைமுகமாக கவனித்த சத்யனுக்கு காரணமேயில்லாமல் எரிச்சல் வந்தது,, வீட்டைவிட்டு ஓடி வந்த காதல் ஜோடியாக இருக்கும் என்று கசப்புடன் எண்ணினான்,, ச்சே பொது இடம் என்றும் பாராமல் இப்படி நடந்துக்கிறாங்களே,, அவள் முகத்தில் இருந்த சோகம் சத்யனின் எண்ணம்தான் சரியென்று உறுதி செய்தது
சத்யனுக்கு அந்த பெண்ணை நினைச்சு கொஞ்சம் வருத்தமாக இருந்தது,, இந்த ஒல்லிப்பிச்சானை நம்பி வந்துருக்காளே என்று நினைத்தான்,, அந்த பெண்ணை பற்றியே சிந்திக்கும் தன்னை நினைத்து சத்யனுக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது,,