அந்த தாயின் கையால் இட்ட அன்னம் நான்கு நாட்களுக்குப் பிறகு சத்யனின் வயிற்றை நிறைத்தது, சத்யன் சாப்பிட்டதும் எழுந்துவிடாமல் தன் அம்மாவை சாப்பிட வைத்தப் பிறகுதான் வெளியே வந்தான்… வைக்கோல் வண்டி வந்து சேர்ந்ததும் வேலையாட்களுடன் இவனும் சேர்ந்து எல்லாவற்றையும் மாட்டுக் கொட்டகையில் கொண்டு போய் போட்டுவிட்டு,,
வெளி வராண்டாவில் இருந்த கட்டிலை எடுத்து வாசலில் போட்டுக்கொண்டு படுத்தான்.. காலையிலிருந்து உழைத்த களைப்பு அவன் கண்களை தழுவவில்லை,, நாளைய பஞ்சாயத்து எப்படியிருக்கும் என்ற சிந்தனை ஓட்டம் அவன் தூக்கத்தை தூரவிரட்டியது.. இவன் போய் பஞ்சாயத்து பேசிய காலம் போய் இப்போது இவனே மற்றவர்கள் முன்பு கைகட்டி நிற்கவேண்டிய நிலையை எண்ணி வேதனையில் குமுறினான்..
சத்யனின் நினைவுகள் சந்தோஷத்துடன் இருந்த காலத்தை எண்ணி பின்னோக்கி போனது தேனி மாவட்டம் சின்னமனூர் மிராசு … ஆள்வார் அய்யனார், பஞ்சவர்ணம் இருவருக்கும் தவமாய் தவமிருந்து கிடைத்த வரம் சத்யமூர்த்தி , இவனுக்கு எட்டுவயது மூத்தவள் அக்கா மீனாள்… இவர்கள் இருவருக்கும் பிறகு பிள்ளைகள் இல்லாமல் போக.. மீனா இளவரசியாகவும்.. சத்யன் அந்த வீட்டின் ஒற்றை இளவரசனாக வளர்ந்தான்..
பஞ்சவர்ணம்,, அந்தகால மகாராணிகள் அந்தபுரங்களில் இருந்துகொண்டு இப்படித்தான் நாட்டை ஆண்டிருப்பார்களோ என்று எண்ணும்படியான தோற்றம்,, ஐந்தேமுக்கால் அடி உயரத்தில்.. ஒரு ஆணைப்போல நிமிர்வுடன் வீட்டை ஆள்பவர்… ஆள்வாருக்கு அதிக உழைப்பின்றி இன்றுவரை தன் தலையில் அனைத்தையும் சுமக்கும் அற்புதமான பெண்மணி சத்யனுக்கு அம்மாவைவிட அக்கா மீனாவின் மீதுதான் உயிர்.. இவனுக்கு பதினோரு வயதாக இருக்கும்போது மீனாவுக்கு திருமணம் நடந்தது, மாப்பிள்ளை அதே ஊரில் இவர்களை விட சுமாரான குடும்பத்தை சேர்ந்தவன் ..
மகளை பிரிந்து இருக்கமுடியாத காரணத்தால் உள்ளூரிலேயே நல்லவன் ஒருவனைத் தேடி மகளுக்கு மணமுடித்தார் ஆள்வார் மாப்பிள்ளை தர்மலிங்கத்தின் கத்தையான மீசைப் பார்த்து மீனாளை விட சத்யன்தான் பயந்துபோய் அக்காவை அந்தாளுக்கு கல்யாணம் பண்ணாதீங்க என்று கத்தி ஆர்பாட்டம் செய்தான், அவனை சமாதானப்படுத்த மணவறையில் இருந்த மீனாவே எழுந்து வரவேண்டிய நிலை…. திருமணம் முடிந்த நான்கு நாட்கள் வரை தம்பியை உறங்க வைத்துவிட்டுதான் கணவனின் அறைக்குள் வந்தாள் மீனா, முதலில் கேலி செய்து கோபப்பட்ட தர்மன்.. சத்யனுக்கு மீனா இன்னொரு தாய் என்பதை புரிந்துகொண்டான் பிறகு அவரும் சத்யனை அனுசரித்துக்கொண்டு அவனை தன் அன்பால் ஈர்த்தார்..
தான் எதிர்பார்த்தது போல் அல்லாமல் மாமா நல்லவராக இருக்கவும் தர்மனின் வீடு சத்யனுக்கும் புகுந்தவீடு போல் ஆனது,, அக்கா மீனா கொண்டு சென்ற சொத்துக்களோடு சத்யனும் அங்கேப் போனான்.. மீனாள்.. தர்மனுக்கு சத்யன் மூத்த மகன் போல் ஆனான்.. ஆள்வார் தன் மகள் தன் வீட்டில் இருந்தது போல் வசதியாக வாழவேண்டும் என்ற காரணத்தால் தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மகள் பெயரில் எழுதிவிட்டு அடுத்த தெருவில் இருந்த இன்னொரு பெரிய வீட்டையும் மகளுக்கு கொடுத்தார்… தர்மன் திறமையானவர்,
மாமனார் கொடுத்ததை வைத்துக்கொண்டு உழைத்து ஒன்றுக்கு நான்காக சொத்தை பெருக்கி ஊரில் ஆள்வாரின் சம அந்தஸ்துக்கு வந்தார்.. ஆனாலும் மாமனார் மாமியார் எதிரில் நின்றுகூட பேசமாட்டார், அவ்வளவு மரியாதை அவர்கள் மீது மீனாவுக்கு முதல் மகன் வீரேந்திரன் பிறந்தபோது சத்யனுக்கு வயது பதிமூன்று… அடுத்த இரண்டு வருடத்திலேயே அடுத்த மகன் தேவேந்திரனை பெற்றாள் மீனா, சத்யனுக்கு பதினேழு வயதாக இருக்கும்போது தான் அந்த வீட்டின் தேவதை மான்சி பிறந்தாள்..
அவள் பிறந்ததை திருவிழாபோல கொண்டாடினார்கள்,, வெள்ளை வெளேரென்று சின்னச்சின்ன கைகால்களை ஆட்டிக்கொண்டு உருண்டை விழிகளை உருட்டியபடி சிரிக்கும் அக்கா மகள்தான் சத்யனுக்கு உலகம் என்பதுபோல் ஆனது,, பள்ளிக்கூடம் விட்டதும் தன் வீட்டுக்குப் போகாமல் நேராக அக்கா வீட்டுக்குத்தான் வருவான்… பனிரெண்டாம் வகுப்பு முடித்து மதுரையில் ஒரு கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முதலாமாண்டு சேர்ந்த ஆறாவது மாதமே அவன் படிப்பில் இடி விழுவது போல அப்பாவுக்கு பக்கவாதம் என்ற செய்தி வர..
சத்யன் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வரவேண்டிய நிலை வந்தது.. ஆள்வார் இடது பக்க பக்கவாதத்தால் படுக்கையில் கிடக்க அந்த ஊரே கண்ணீரில் மிதந்தது.. சத்யன் வந்ததும் மகனின் கையைப்பிடித்துக் கொண்டு கலங்கிய ஆள்வார், பக்கத்தில் இருந்த மருமகனை பார்வையால் அழைத்தவர் மகனின் கையை எடுத்து அவர் கையில் வைத்து “ என் உசுரு போறதுக்குள்ள என் மகன் கல்யாணத்தை பார்க்கனும் மாப்ள ” என்று ஈனஸ்வரத்தில் முனங்கினார் அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ந்து போனார்கள்,
பதினெட்டு வயது பையனுக்கு கல்யாணமா என்று அனைவரும் குழம்பி தவிக்க.. தன் கணவரின் ஆசையை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று ஒரே வைராக்கியமாக நின்றார் பஞ்சவர்ணம்… படிக்க போகிறேன் என்று மைத்துனனை “ அப்பாவுக்காகடா மாப்ள” சமாதானம் செய்து ஒருவழியாக அவனை சம்மதிக்க வைத்து பக்கத்து ஊர்களில் அவன் கம்பீரத்துக்கு ஏற்ற பெண்ணை தேடினார் தர்மன்.. இவர்களின் அவசரத்துக்கு ஏற்றார்போல் சத்யனின் கம்பீரத்துக்கும் அழகுக்கும் ஏற்றப் பெண் எங்கும் கிடைக்கவில்லை,, தர்மன் சத்யனின் திருமணத்தை நடத்துவது தன் கடமையாக செயல்பட்டார்..
இறுதியாக கோவையிலிருந்தாள் சத்யனின் மனைவியாக ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்ட சொர்ணாம்பிகை , ஒரே வாரத்தில் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு மறாவது வாரமே திருமணம் செய்வது என முடிவானது… ஆள்வாரின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லாது அப்படியே கிடக்க,, நிச்சயிக்கப்பட்ட நாளில் சத்யன் சொர்ணாம்பிகை இருவரின் திருமணமும் பெரியவர்களின் ஆசியுடன் நடந்தேறியது.. தாலி கட்டும்வரை தன் மனைவியாகப் போகிறவள் எப்படியிருக்கிறாள் என்றுகூட நிமிர்ந்து பார்க்கவில்லை,,
தன் படிப்பு வீனானது ஒருபுறம், அப்பாவின் உடல்நிலை மறுபுறம் என அவன் நெஞ்சை வாட்டி வதைக்க,, பொம்மை கல்யாணம் போல் நடந்தேறியது சத்யனின் திருமணம்.. ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஆள்வாரின் அறைக்குள் நுழைந்தனர் மணமக்கள்.. கண்கள் குளமாக மகனையும் மருமகளையும் ஆசிர்வதித்தவர் மகனை திருமணக்கோலத்தில் பார்த்ததே போதும் என்ற நிறைவுடன் அன்று இரவே தனது உயிரை எமன் கையில் ஒப்படைத்தார் ஆள்வார்…