தனது இரண்டு பிள்ளைகளின் படிப்பிலும் வளர்ச்சியிலும் கவனமாக இருக்கும் வாசுகிக்கு மேலும் சுமையாக இருக்க வேண்டாமென்று சத்யன் தனது மனைவி மகனுடன் பக்கத்திலேயே வீடு கட்டிக் கொண்டு தனியாக வந்துவிட்டான்….
கண்ணீருடன் மறுத்த சகோதரிக்கு நிதர்சனத்தைக் கூறிப் புரிய வைத்து “வீடு மட்டும் தான் அக்கா தனித்தனியா… நமது அன்பு எப்பவும் இணைந்தேயிருக்கும்” என்று பல வகையில் ஆறுதல் கூறிவிட்டு அக்காவின் சம்மதத்தோடு தனியாக வந்தான்… அவர்களுடன் பவானியும் வந்து இணைந்து கொண்டாலும் மான்சியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு சத்யனுடையதாகவே இருந்தது….
அடிக்கடி வந்துப் போகும் ஆதி, மருத்துவம் படித்த தன்னை விரும்பிய கீர்த்தனா என்ற பெண்ணை மணந்து கொண்டான்…. கீர்த்தனா ஒரு மருத்துவர் என்பதால் மட்டுமில்லாமல் மான்சியைப் பற்றி முன்பே தெரிந்திருந்தவள் என்பதால் ஆதியுடன் இணைந்து மான்சியைக் கவனிப்பதைத் தனது கடமையாக செயல்பட்டாள்….
ராமரின் வனவாசம் போன்று லாப நஷ்டங்களுடன் கூடிய சற்று கரடு முரடான பதினான்கு வருடங்கள் உருண்டோடி விட்டது… சத்யனின் மகன் சாஸ்வதனுக்கு பதினான்காம் வயது… தனது அறையில் அமர்ந்து ஹோம்வொர்க் செய்து கொண்டிருந்தவனின் அருகே வந்த பவானி….
“சாஸ்வத் ராஜா… பாட்டிக்கு கால் வலிக்கிதுடா… மாடியேறிப் போக முடியலை… டாடிக்கு ஏதோ முக்கியமான மீட்டிங் நைட் வர லேட் ஆகும்னு சொன்னாங்க… நீ போய் மம்மியை தூங்க வச்சிட்டு வா ராஜா” என்று கெஞ்சுதலாகக் கேட்க…
“இதுக்கு ஏன் பாட்டி இப்புடி கெஞ்சுறீங்க? டாடி எனக்கும் கால் பண்ணி சொல்லிருக்காங்க… இதோப் போய் பார்க்கிறேன்” என்று கூறி விட்டு மாடிக்கு ஓடினான்…. டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மான்சி…. தன் மகனைக் கண்டதும் கைகளை நீட்டியவள்
“ஏய்…. அத்தானோட பாப்பா… வா வா… சத்யா அத்தான் எங்க?” என்று கேட்க….. அருகில் வந்த சாஸ்வத் “மம்மி…. டாடி இப்ப வந்துடுவாங்க…. நீங்க நான் சொன்னாலும் கேட்பீங்க தானே?” என்று கேட்டான்…”ம் கேட்பேனே” என்று பெரிதாகத் தலையசைத்தாள் மான்சி…
“அப்படின்னா வாங்க… போய் பாத்ரூம் போய்ட்டு வந்துப் படுங்க… டாடி வந்துடுவாங்க” என்றான்… உடனே மகனின் சொல் கேட்டாள் மான்சி…. தாயைக் கழிவறைக்கு அழைத்துச் சென்றுவிட்டான் சாஸ்வத்…. வெளியே வந்தவளை மீண்டும் அழைத்துச் சென்று கால்களைக் கழுவிவிட்டு அழைத்து வந்து படுக்கையில் உட்கார வைத்தான்…. வேலைக்காரப் பெண் எடுத்து வந்த பாலை தாய்க்குப் புகட்டி வாயைத் துடைத்து படுக்க வைத்தான்….
இவனும் அருகேப் படுத்து நெற்றியை வருடி உறங்க வைத்தான்…. கம்பெனியின் மீட்டிங் முடிந்து வந்த சத்யன் மகனைக் கண்டு புன்னகைக்க…. “ஸ்ஸ் ஸ்…” என்று உதட்டில் விரல் வைத்து எச்சரித்த சாஸ்வத் “ம்ம்மி எழுந்துடுவாங்க… நீங்க போய் சாப்பிட்டு வாங்க டாடி… அதுவரை நான் மம்மி கூட இருக்கேன்” என்றான்…
மகனைப் பெருமையுடன் பார்த்து விட்டு சாப்பிடுவதற்காக கீழே சென்றான் சத்யன்…. சாஸ்வத் அப்படியே சத்யனின் மறுஉருவம் தான்.. உடலாலும் சரி மனதாலும் சரி… முழுக்க முழுக்க சத்யனே தான்…. பிறப்பிலிருந்தே தனது தாயின் நிலைமையை அறிந்தவன் என்பதால் மான்சி அவனுக்கும் ஒரு குழந்தையாகிப் போனாள்…. சாஸ்வத் வளர்ந்தான்…
படித்து பட்டம் பெற்றான்…. சத்யனுடன் கம்பெனியில் இணைந்தான்…. அவனது திறமையில் கம்பெனி விரிவடைந்தது…. தகப்பனால் முடியாத தருணத்தில் தாயைக் கவனிப்பது இவன் பொறுப்பாக இருந்தது…. சத்யனைப் போலவே தனது அத்தை வாசுகியின் குடும்பத்தோடு மிகுந்த அன்போடு இருந்தான்…. முன்பே பேசி வைத்தபடி ஆதி கீர்த்தனா தம்பதியரின் மகள் ஆராதனாவுக்கும் சாஸ்வத்க்கும் திருமணம் நடந்தேறியது….
குடும்பத்தின் மீது அக்கறையும் அன்பும் காட்டுவதில் ஆராதனா தனது தகப்பனையே மிஞ்சுபவளாக இருந்தாள்…அன்று முக்கியமான க்ளையண்டைப் பார்ப்பதற்கென சத்யன் மும்பை செல்ல வேண்டிய நிலைமை…. சாஸ்வத்தின் மனைவி ஆராதனா ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருக்க…. இப்போதைய நிலையில் மனைவியை எப்படி விட்டுவிட்டுப் போவது என்று தவித்தவனுக்கு
“ரெண்டு நாள் தானே டாடி… நாங்கப் பார்த்துக்கிறோம்… போய்ட்டு வாங்க” என்று தைரியம் கூறி இருவரும் அனுப்பி வைத்தனர்…. வழக்கம் போல தனது தாய்க்கான பணிவிடைகளை முடித்து உறங்க வைத்து விட்டு தனது அறைக்கு வந்தான் சாஸ்வத்….. மனைவியை அணைத்தவாறு அருகில் படுத்தான்… திடீரென்று ஞாபகம் வந்தவளாக “ஏய் சாஸ்வத் இன்னைக்கு டேட் ட்வன்ட்டி தானே?” என்று கேட்க… “ஆமா… என்னாச்சு ஆரா?” என்று கேட்டான் சாஸ்வத்…
“ஓ காட்… நான் எப்புடி மறந்து போனேன்….” என்றபடி வேகமாக எழுந்து அமர்ந்தவள் “சாஸ்வத்… நான் அத்தை ரூம்ல போய் படுத்துக்கிறேன்…. இது அவங்களுக்கு பீரியட்ஸ் டேட்…. நைட்ல ஏதாவது ஆகிட்ட பயந்துடுவாங்க…. அப்புறம் மாமா வந்தாதான் சமாளிக்க முடியும்…” என்றாள்… “ஓ…. சரி வா நானும் வர்றேன்…” என்று அவனும் எழுந்திருக்க…
“நோ நோ… நீ இங்கயே தூங்கு நான் போய் அத்தை ரூம்ல படுத்துக்கிறேன்” என்றுவிட்டு அவசரமாக எழுந்து மான்சியின் அறைக்குச் சென்றாள் ஆராதனா…. குழந்தைபோல் உறங்கியவளின் அருகே அமர்ந்து போர்வையை சரிசெய்து விட்டு நெற்றியை வருடி அன்பாகப் பார்த்துவிட்டு குனிந்து நெற்றியில் முத்தமிட்டு “தூங்குங்க அத்தை” என்று முனுமுனுப்பாக கூறிவிட்டு மான்சிக்குப் பக்கத்திலேயேப் படுத்துக் கொண்டாள் ஆராதனா…
“இந்த மான்சிக்குத் தான் எத்தனை அம்மாக்கள்?” பவானி, சத்யன், செபாஸ்ட்டியன், வாசுகி, ஆதி, சாஸ்வத், ஆராதனா…. என இத்தனை தாயார்களைப் பெற்ற இந்த மான்சி தெய்வப் பிறவிதான்…. தாயாக வாழ்வதற்க்கு வயதும் அனுபவமும் தேவையில்லை…. தாய்மையை உணரும் மனமிருந்தால் மட்டுமே போதும்!!!!
அம்மா…..
இவ் வார்த்தையைக் கூறும் போதே..
இதயத்தில் இறுக்கமில்லா உணர்வு…
பத்து மாதம் சுமந்தவள் மட்டுமில்லை..
சுமக்காத தாய்மார்களும் ஏரளமாக உண்டு…
வயிற்றில் சுமப்பது மட்டும் தாய்மையல்ல..
மனதில் சுமப்பதும் தாய்மை தான்…
தாய்மைக்கு இணையாகக் கூற…
உலகில் ஒன்றுமில்லை…
தாய்மையை உணர வயதுமில்லை!
-சுபம்-
நன்றி:- சத்யன்