சத்யனுக்குப் பேச்சே வரவில்லை…. மான்சிப் பற்றிய அத்தனை விஷயங்களும் தெரிந்தாகிவிட்டது….. ஒருத்தர் சொல்லித்தான் என்னையே அவளுக்குத் தெரியும் என்று அழுததெல்லாம் ஞாபகம் வந்தது…
‘இன்று நான் சொன்னால் தான் மான்சிக்கு சகலமும் தெரியும்… என்னை இந்தளவுக்கு பிடித்துப் போகக் காரணம்? இதுதான் கடவுள் விளையாட்டா?’ மவுனமாக எழுந்தவன் டாக்டரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான்… “ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்… இத்தனை நாளா மனசுக்குள்ள ஒரு வெறுமை இருந்தது…
இப்போ அது இல்லை….. நான் போய் மான்சியைப் பார்க்கப் போறேன்” என்றான்…. எழுந்து வந்த டாக்டர் சத்யனை அணைத்து “நீங்க புரிஞ்சுக்குவீங்கன்னு எனக்குத் தெரியும் சத்யன்… இப்போ மிட்நைட்ல போய் மான்சியைப் பார்க்க வேண்டாம்… நாளைக்குப் போங்க… பவானி கொஞ்சம் கோபப்படுவாங்க… ஆனா ஒரு தாயுள்ளம் அப்படித்தான் புரிஞ்சுக்கங்க…
முடிந்த வரை மான்சி முன்னாடி கோபமா பேசிடாதீங்க” என்று கூறினார்.. சரியென்று தலையசைத்து விட்டு அவரிடமிருந்து விடை பெற்று நண்பனுடன் வெளியே வந்தான்…. அமைதியாக வந்த சத்யனின் மனதைப் புரிந்த ஆதி அவனைத் தோளோடு அணைத்து வந்து காரில் ஏற்றி விட்டு இவனே காரைச் செலுத்திக் கொண்டு வந்தான்… வீட்டிற்கு வந்ததும் சத்யனின் முகத்தைப் பார்த்து பதறி வந்த வாசுகியை பார்வையாலேயே அடக்கிவிட்டு…
“ஒரு பார்ட்டிக்குப் போனோம்.. கொஞ்சம் ட்ரிங்க் பண்ணிருக்கான்… நைட் தூங்கினா சரியாகிடும்.. யாரும் தொந்தரவு பண்ணாதீங்கக்கா” என்று கிசுகிசுப்பாகக் கூறிவிட்டு நண்பனை மாடிக்கு அனுப்பி வைத்தான்…தனது அறைக்கு வந்த சத்யனுக்கு நேற்றைய மனநிலைக்கும் இன்றைய மனநிலைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது….
மான்சியின் மனதில் தன்மீதான நேசம் உருவாகியிருக்கிறது என்பதே அவனை நேசனாக்கியிருந்தது….. அன்று தன்னுடன் கூடியபோது அவள் மனதிலும் ஆர்வமும் ஆசையும் காதலும் நிறைந்திருந்திருக்கிறது…. ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம்தான் அவளுக்குத் தெரியவில்லை என்பது டாக்டரிடம் உரையாடியப் பிறகு தெளிவாகப் புரிந்தது….
நாளை மான்சியை சந்திக்கப் போகிறோம் என்பது அவனுக்குள் சிறு சலனத்தையும்… பெரும் பரபரப்பையும் விதைக்க…… தன்னைப் பற்றி மான்சிக்கு எந்தளவுக்குத் தெரிந்திருக்கிறது? எத்தனை நேசம் அவளுக்குள் புதைந்துக் கிடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவனையும் மிஞ்சியது… நாளைய விடியலுக்காக இன்றைய கனவுகளுடன் உறங்க முயன்றான்…
” நேசம் கொண்ட பூவே…
” உன் நினைவலைகளில்…
” நிழலாய் வாழ்ந்து வரும்…
” எனது நிஜங்களின் சுவடறிய…
” வருகிறேனடி பெண்ணே!
” ஆசையோடு அத்தான் என்பாயா?
” அய்யாவென அள்ளி அணைப்பாயா?
” அன்பு கொண்டு ஆர்ப்பரிப்பாயா?
” என் விரல்களோடு விரல் கோர்த்து..
” விழிகளில் பல விந்தைகள் காட்டுவாயா?
” நமக்கான உனது காதலை…
” கண்டுகொள்ள வருகிறேனடி கண்மணி
மறுநாள் காலைப் பொழுது… விடியல் எத்தனை சுகமானதாக இருந்தாலும் நிலவை ரசிக்க முடிந்தளவுக்கு சூரியனை ரசிக்க முடியாது என்பது தான் நிஜம்…. ஆனால் சத்யனுக்கோ அந்த சூரியனும் கூட சுகமாகத் தெரிந்தான்….. பால்கனியில் நின்றுகொண்டு இரை தேடிச்செல்லும் பறவைகளை ரசித்தான்….
பறவையைப் போல் இறகு கொண்டு பறக்க அவன் மனம் துடித்தது…. ஆதியின் போன் காலுக்காக காத்திருந்தவனின் காதுகளில் தேனிசை போல் ஒலித்து அழைத்தது கைப்பேசி…. அவசரமாக எடுத்துப் பார்த்தான்…. ஆதி தான் அழைத்திருந்தான்…. “சொல்லு ஆதி…. எங்க வரட்டும்?” பரபரப்பாகக் கேட்டான்…. நண்பனின் ஆர்வம் ஆதியை புன்னகைக்க வைத்தது….
“கடைக்கு வந்துடு சத்யா… அங்கிருந்தே கிளம்பலாம்” என்றான்… “ம் ம், இருபது நிமிஷத்துல கடையில இருப்பேன் மச்சி” என்றுவிட்டு உடனே கட் செய்தான்…. கார் சாவியை எடுத்துக்கொண்டு வேகமாக படிகளில் இறங்கிய தம்பியை வியப்பாகப் பார்த்த வாசுகி “சாப்பிடலையா அப்பு?” என்று கேட்க….
“இல்லக்கா…. ஆதி கூட வெளியேப் போறேன்… அங்கயே ஏதாவது சாப்பிட்டுக்கிறேன்… நீங்க சாப்பிடுங்கக்கா” என்றபடி வாசலுக்குத் தாவி ஓடினான்… உற்சாகத்தை மறைக்க முயன்று தோற்று முகத்தைக் காட்டாது ஓடும் தம்பியை வியப்புடன் பார்த்தாள் வாசுகி….
பின்னால் வந்து மனைவியின் தோளில் கைவைத்த மதி “சத்யனை இதுபோல பார்த்து ரொம்ப நாளாச்சில்ல வாசு?” என்று கேட்க… கணவனைத் திரும்பிப் பார்த்த வாசுகி “ம் ம்…. ஆனா திடீர்னு இந்த மாற்றம் எப்படி?” என்றவள் மதியின் முகத்தை கேள்வியாக நோக்கி “சத்யனோட லைப்ல வேறறொரு பொண்ணு வந்திருப்பாளோ? ஐ மீன்,, சத்யன் யாரையாவது காதலிக்கிறானோனு தோனுது” என்றாள்…