பணக்காரர்களின் எளிமையான திருமணம் அருமையாக களைக்கட்ட…. எல்லோரும் சந்தோஷத்துடன் ஆசிர்வதிக்க … தெய்வ சன்னிதானத்தில் சத்யன் மான்சியின் கழுத்தில் தாலிகட்டினான்,, இத்தனை நாட்களாக இருந்த குற்றவுணர்வு போய் பழைய சத்யனாய் நிமிர்ந்து கம்பீரமாய் நின்றான்.. மான்சியும் அவன் கம்பீரத்தை ரசித்து உரசிக்கொண்டு நின்றாள்..
பஞ்சவர்ணம் மற்றும் ஊர் பெரியவர்கள் எல்லோர் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் பெற்று எழுந்தவர்கள்.. கடைசியாக தர்மன் மீனா அருகில் வந்தபோது… சத்யனின் பார்வை தனது உடன்பிறந்தவளிடம் ஆசிர்வாதத்தோடு மன்னிப்பையும் வேண்டியது…
“ அக்கா.”கையெடுத்துக்கும்பிட்டபடி காலில் விழுந்தவனை தூக்கிய மீனா “ தம்பி இந்த கல்யாணத்தை மூனு வருஷத்துக்கு முன்னாடியே பண்ணிருக்கனும்… என் மகன்னு நான் சுயநலமா நெனைச்சிட்டேன்… கடைசில கடவுள் பார்த்து முடிச்சு வச்சிட்டான்… நீ எதை நினைச்சும் கலங்காதடா… மான்சிதான் உன் பொண்டாட்டினெனு அவன் போட்ட முடிச்சு… இதுல எனக்கும் உன் மாமாவுக்கும் எந்த வருத்தமும் இல்லை.. நடந்ததுக்கு நாங்கதான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்… எங்களை மன்னிச்சுடுடா தம்பி” என்ற அக்காவின் கைகளைப் பற்றிக்கொண்டான் சத்யன் …
அவனுடையே காலில் விழுந்தாலும் அவனுக்கு முன்பே எழுந்து ஸ்டைலாக தன் அப்பாவின் தோளில் சாய்ந்து நின்றிருந்த மான்சி “ ரெண்டும் ஓவரா சீன் ஓட்டுதுங்கப்பா.. பெரிய… பாசமலர் சிவாஜி சாவித்திரின்னு நெனைப்பு” என்று இவர்களைப் பார்த்து நக்கல் செய்ய… “ ஸ்ஸ் சும்மா இரும்மா” என்று அதட்டினார் தர்மன்..
ஓரமாய் நின்றிருந்த தேவனுக்கு அவன் அம்மா சொன்னது காதலில் விழுந்ததும் ஆச்சர்யமாக நிமிர்ந்தான்… ‘ மூனு வருஷத்துக்கு முன்னாடி மான்சியை மாமாவுக்கு கொடுத்திருக்கனும்னு சொல்றாங்களே என்ற எண்ணியபடி சத்யன் மான்சியைப் பார்க்க.. அவர்களது ஜோடிப்பொருத்தம் அவனை வியக்கவைத்தது,, வயசு வித்தியாசத்தைப் பற்றி பெரிதாக எண்ணியவனுக்கு இப்போது அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை…
அவன் மீது ஒரு சிறிய கல் வந்து விழ அது வந்த திசையை நோக்கினான்… செல்விதான் நின்றுகொண்டு கண்ணால் ஜாடை காட்டி எப்படி ஜோடிப்பொருத்தம் என்றாள்… தேவனால் மறுக்கமுடியவில்லை.. ம்ம் என்று தலையசைத்தான்…. ‘அப்போ அவங்ககிட்ட போ’ என்று ஜாடையில் செல்வி சொல்ல… ‘ போகனுமா? என்பதுபோல் அவளைப் பார்த்தான்… செல்வி தன்னைச்சுற்றி பார்வையை ஓட்டிவிட்டு.. உதட்டை குவித்து அவனுக்கு காற்றில் முத்தமிட்டு.. ‘போ ச் செல்லம்’.என்று ஜாடையில் கொஞ்சினாள். அவள் முத்தத்தை வாங்கிக்கொண்ட தேவனின் கால் செல்வியின் கட்டளைப்படி சத்யனை அனுகியது…
சத்யன் அருகே போய் தயங்கி நின்றவன்… தலைகுனிந்து மெல்லிய குரலில் “ மன்னிச்சிடுங்க மாமா” என்றதும்… சத்யன் கண்களில் நீர் முட்ட அவனை அணைத்துக்கொண்டான் ..
அதைப் பார்த்த மான்சி “ என்னை கட்டிப்பிடிடா மாமான்னா? மச்சானை கட்டிப்பிடிக்குதுப் பாரு? சரியான லூசு மாமா” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்…
கோயிலிலேயே ஆள் வைத்து சமையல் செய்து அனைவருக்கும் சாப்பாடு போடப்பட்டது.. எல்லோரும் கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும்போது மாலை மணி ஆறாகிவிட்டது…
அவர்கள் பின்னாடியே வந்த சத்யன் ஜன்னல்களை மூடி ஏசியை ஆன்செய்துவிட்டு, சோர்வுடன் கண்மூடிக் கிடந்தவளை கவலையுடன் பார்த்தான்…
பிறகு வெளியே வந்தவன் தன் அம்மாவிடம் வந்து “என்னம்மா இவ்வளவு மோசமா இருக்கா?.. எனக்கு ரொம்ப பயமாயிருக்குமா?” என்று ரகசியமாக சொல்ல…
“ மசக்கைன்னா அப்படித்தான் இருக்கும் ராசு…. நம்ம வீட்டுல யாருக்கும் இப்படி இல்ல,, இவ உடம்பு ராசி இப்புடி இருக்கு.. எல்லாம் போகப்போக சரியாயிடும்.. நீ கவலைப் படாதய்யா ” என்றார் ஆறுதலாக…
சத்யன் சரியென்று தலையசைத்து விட்டு கூடத்துக்கு வந்தான்.. திருமணத்திற்கு வராத ஊர் மக்கள் சிலர் சத்யன் மான்சியைப் பார்க்க வீட்டுக்கு வந்தனர்..
சத்யன் மான்சியின் நிலையை சொல்லி மன்னிப்பு கோரிவிட்டு செல்வியை அவர்களுக்கு காபி பலகாரம் எடுத்துவரச் சொல்லி அவர்களுக்கு கொடுத்து உபசரித்து அனுப்பினான்.. செல்விக்கு உதவுறேன் என்று தேவனும் பலகாரத்தட்டை ஏந்திக்கொண்டு அவள் பின்னால் சுற்றினான்
இரவானதும் அவரவர் கூடிக்கூடி ஏதேதோ பேசிவிட்டு.. இறுதியாக தர்மன் ராமைய்யாவை கூப்பிட்டு காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டு “ நீங்க சொல்லிடுங்க ராமைய்யா.. நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்” என்று சொல்லிவிட்டு மகன் மனைவியுடன் தன் வீட்டுக்கு கிளம்பினார்…
தேவன் செல்வியிடம் ரகசிய பார்வையில் விடைபெற… அவளோ சத்யனுக்கு பின்னாடி நின்றுகொண்டு தைரியமாக கையசைத்து அனுப்பினாள்..
வீட்டுக்குள் வந்த ராமைய்யா சத்யனை சீண்டி தனியாக அழைத்துச்சென்று.. என்ன சொல்வது என்று புரியாமல் தவித்து , விழித்து, தலையை சொரிந்து.. தோளில் கிடந்த துண்டை நான்காவது முறையாக உதறிப் போட்டுக்கொண்டு அவனை சங்கடமாகப் பார்த்தார்..
அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்க… “ என்னாண்ணே? என்னாச்சு? என்ன விஷயம் சொல்லுங்க?” என்று கேட்க…
தலையை சொரிந்த வாறு “ அது வந்துங்க தம்பி…… நம்ம மான்சி பாப்பாவுக்கு உடம்புக்கு இப்படி இருக்குறதால…… அதெல்லாம் எதுவும் ஏற்பாடு பண்ணலையாம்.. நீங்களே பாப்பாவோட உடல்நிலையைப் பார்த்து” என்று மறுபடியும் துண்டை உதறி தோளில்ப் போட்டுக்கொண்டு தலையை சொரிந்த வாறு “ உங்க சவுரியப்படி ஒருநாளைக்கு வச்சுக்க சொன்னாக தம்பி… இதை மாமன் அவரு சொல்ல சங்கடப்பட்டு,, என்னையப் போய் சொல்லச்சொல்லிட்டு போயிட்டாரு தம்பி முறை உள்ளவருக்கிட்ட நான் மட்டும் எப்படி சொல்வேன்னு அவருக்கு தெரியலையே” என்று சங்கடமாக சொன்னவரைப் பார்த்து சிரித்து ..
“ ம்ம் எனக்கும் தெரியும்னே.. அவதான் எனக்கு முக்கியம்.. வேற எதுவும் வேண்டியதில்லை… நீங்க வீட்டுக்கு போங்க” என்று அவரையும் செல்வியையும் அனுப்பி வைத்துவிட்டு தனது அறைக்குப் போனான்…
கட்டிலில் அமர்ந்திருந்த மான்சி முன் பால் டம்ளரை நீட்டியபடி “ கண்ணு வாந்தி வந்தாலும் பரவாயில்ல வயித்த காயப்போடக்கூடாதும்மா இதை மட்டும் குடிச்சிட்டு படுத்துக்க கண்ணு” என்று பேத்தியின் முன் மன்றாடிக்கொண்டு இருந்தார் பஞ்சவர்ணம்..
“ ம்ஹூம் முடியாது அம்மாச்சி.. வாந்தி வரும்” என்று காது தொங்கட்டான்கள் ஆட தலையசைத்து மறுத்தாள் மான்சி..
சத்யன் அம்மாவை நெருங்கி “ அம்மா மணி பத்தாகுது. நீங்க போய் படுங்க.. நான் பார்த்துக்கிறேன்” என்ற சத்யன் பால் டம்ளரை வாங்கிக்கொள்ள.. பஞ்சவர்ணம் வெளியேப் போனார்..
சத்யன் கதவைச் சாத்திவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்து “ மான்சி இதை மட்டும் குடிச்சிட்டு படுத்துக்க” என்று அவளை நெருங்கி உதட்டருகில் டம்ளரை எடுத்துச்செல்ல…
இத்தனை உபாதைகளும் இவனால் தான் என்ற ஆத்திரமோ என்னவோ? “ என்ன…. இப்படியே பால் குடுக்குற சாக்குல பர்ஸ்ட்நைட் கொண்டாடலாம்னு பார்க்குறியா?.. அதுதான் நடக்காது… என்னை நீ தொடவே முடியாது” என்று நெருப்பை உமிழ்ந்தாள் மான்சி..
அதிர்ச்சியுடன் எழுந்துவிட்டான் சத்யன் “ என்ன மான்சி இப்படி பேசுற?…..எனக்கு அந்த மாதிரி நெனைப்பே இல்லைடா” என்று அவளுக்கு விளக்க முயன்றவனை கையசைத்து தடுத்த மான்சி..
“ ஆமா பின்ன அந்த மாதிரி நெனைப்பெல்லாம் என்கிட்ட எப்படி உனக்கு வரும்… அதுக்குன்னு எவளாவது இருக்காளோ என்னமோ?” என்று மறுபடியும் நெருப்பை வீசினாள்…