சரவணனை அவன் வீட்டில் இறக்கி விட்டு, என் வீட்டுக்குப் போனேன். வீடே அமைதியாக இருந்தது. அண்ணன் ஒரு ஓரமாக உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்க, என் தங்கை என்னைப் பார்த்த்தும்,…
” அம்மா,….அவ வந்துட்டா!” என்றாள் சத்தமாக.
காளி தேவியைப் போல கண்களில் கோபம் கொப்பளிக்க, என்னை நோக்கி வேக வேகமாக வந்தவள், என் தலை முடியை கொத்தாகப் பிடித்து, ஓங்கி ஓங்கி என் கன்னங்களில் அறைந்தாள்.
கோபத்தில் மூச்சிரைக்க,”எவன்டி அது? படிக்கப் போறியா…இல்ல,…ஊர் மேயப் போறியா? படிக்க அனுப்புனா,…பரத்த மாதிரி சுத்தறியா? எத்தனை நாள் பழக்கம்டி?”
தலை முடிகள் கலைய, கண்களில் நீர் பெருகெடுக்க,…. சரவணனையும், என்னையும் சேர்த்து எங்களுக்கு தெரிந்த யாரோ பார்த்து, என் வீட்டில் பற்ற வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது.
“நான் கேட்டுகிட்டே இருக்கேன். வாயிலே எதையோ வச்சமாதிரி நிக்கிறியேடி. உண்மையைச் சொல்லுடி? யார் அவன்? உனக்கும் அவனுக்கும் எத்தனை நாள் பழக்கம்?” கேட்டுக் கொண்டே தலை முடியை கொத்தாகப் பிடித்துக் கொண்டு, கோபம் அடங்காமல் திரும்பவும் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தாள்.
அங்கே நடந்து கொண்டிருந்த சம்பவத்தைக் கண்டும் காணாதது போல அண்ணன் எழுதிக் கொண்டிருக்க , என் தங்கை, என்னையும் அம்மாவையும் மாறி, மாறி மலங்க மலங்க விழித்துப் பார்த்தாள்.
“உங்க அப்பா வரட்டும் சொல்றேன். என்ன ஏதுன்னு கேக்கட்டும். வயசுக்கு வந்தப்பவே, எக்கேடோ கெட்டுப்போன்னு எவன் தலையிலயாவது கட்டிக் கொடுத்திருக்கணும். பொட்டப் புள்ளையை படிக்க வச்சது எங்களோட தப்புதான். இனி அந்த மனுஷன் வந்து கேக்கிற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்றது?அம்மாவும் கண்ணீர் விட்டு அழுது கலங்கினாள்.
நான் செய்தது தப்புதானோ? என்று ஒரு கனம் மனதில் நினைப்பு வந்தாலும், வாலிப வயதின் திமிறு அதை ஏற்க மறுத்தது. வீம்புக்காக காதலை தொடரச் சொன்னது.
அடித்து ஓய்ந்த அம்மா ஒரு மூலையில் சரிய, நான் எதிர் மூலையில் சரிந்தேன்.
இரவு மணி 8 ஆனது.
அப்பா உள்ளே நுழைந்ததுமே, அம்மா, என் புராணத்தை ஆரம்பிக்க, வேலை களைப்பிலும், கவலையிலும் அம்மா சொன்னதைக் கேட்ட அப்பாவுக்கு கண் மூடித் தனமான ஆத்திரம் வர, பெல்ட்டை உறுவி விளாச,….ஐயோ,…ஐயோ என்று நான் கதற, அங்கிருந்த அனைவருமே வேடிக்கை பார்த்தனர்.
அடித்து ஓய்ந்த அப்பாவிடம்,”ஏங்க இவ இனிமேல படிக்க வேண்டாம். உங்க சொந்தத்திலியோ, என் சொந்த்த்திலியோ,… கூனோ, குருடோ,….. முடமோ, மொன்டியோ எவனோ ஒருத்தனுக்கு பேசி முடிச்சு, மானம் மரியாதை போறதுக்குள்ள, இருக்கிறதை வச்சு கல்யாணம் செஞ்சு வச்சிடாலாம்ங்க”.
ஆமாம்டி,… இவளை வீட்டுகுள்ளயே வச்சு பூட்டு. வெளியே விடாதே. எப்ப நம்ம மானத்த சந்தி சிரிக்க வச்சாளோ அப்பவே முடிவு பண்ணிட்டேன். இவ மாதிரி பொண்ணுங்க நாம செஞ்சு வைக்கிற கல்யாணத்துக்கு ஒத்துகிட மாட்டாளுங்க. ஒத்துகிட்டா பாரு. இல்லைன்னா இங்கேயே இவள வெட்டிப் போட்டுடறேன். நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை.அமைதியா உட்கார்ந்திருந்த அண்ணனை நோக்கி,”என்னடா சொல்ற?”
“நீங்க சொல்றதும் சரிதாம்பா.”
சரி அவனை மறந்துட்டு நாம செஞ்சு வைக்கிற கல்யாணத்துக்கு ஒத்துக்கிறாளா? கேட்டுச் சொல்லு”அம்மாவுக்கு அப்பா ஆணையிட,….
” சொல்லுடி அப்பா கேக்கிறார்ல?அவ வீம்புக்காரி, எவ்வளவு அடிச்சும் ‘கம்’னே இருக்கா பாரேன். நல்லா யோசிச்சு காலைல ஒரு நல்ல முடிவைச் சொல்லு. இல்லைன்னா உங்கப்பா மனுஷனா இருக்க மாட்டார்”
“அம்மா விடும்மா, இந்த அடி அடிச்சும் ஒரு வார்த்தை பேசாம இருக்கான்னா, அவ ஏதோ முடிவோட்தான் இருக்கா? நான் பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன்.” அண்ணன் ஏதோ முடிவோடு சொல்லி நடந்துகொண்டிருந்த சம்பவத்துக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்தான்.
அம்மா சமையலறை வேலைகளை முடிக்கப் போக, அப்பா ஹாலில் கவலை தோய்ந்த முகத்தோடு கன்னத்தில் கை முஷ்டியை முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருக்க, என் தங்கை தூங்கி இருந்தாள்.
அம்மா, நான், என் தங்கை மூவரும் சேர்ந்து வழக்கமாக படுக்கும் அறையில் நான் சென்று படுக்கையில் குறுகிப் படுத்திருக்க, அங்கே வந்த என் அண்ணன் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து, மெதுவான குரலில்,….
” இங்க பாரு மீனா. உனக்கு உதவத்தான் நான் வந்திருக்கேன். காதல் கொண்ட மனசு ரெண்டும் பிரியறப்போ எப்படி கஷ்டப் படும்னு எனக்கும் தெரியும். அதனால உண்மையைச் சொல்லு. யாருக்காகவும் நீ பயப் படத் தேவையில்லை. அவனை நீ உண்மையாலுமே காதலிக்கிறியா?”
ஆமாம் என்பது போல தலையாட்டினேன்.
அவன் உன்னையும் அதே மாதிரி உண்மையா காதலிக்கிறானா? இல்லை உன் உடம்பைக் காதலிக்கிறானா?
“இல்லேண்ணா,, உண்மையாத்தான் ரெண்டு பேரும் காதலிக்கிறோம்.உடம்பு சுகத்துக்காக இல்ல”
“எத்தனை நாளா?”
“ரெண்டு வருஷமா.”
“இந்த சின்ன வயசுக் காதல் வாழ்க்கையிலே உங்களுக்கு கஷ்டத்தைதான் கொடுக்கும்னு உங்களுக்கு தெரியுமா?”
“தெரியும்.”
“இருந்தாலும் காதலை,….. காதலனை விட மாட்டே?”
“ம்..”
“நீங்க ரெண்டு பேரும் உங்க காதல்ல உறுதியா இருந்தீங்கன்னா, உங்க காதலைப் பிரிக்க யாராலும் முடியாது.”
“இருந்தாலும், ராத்திரி முழுக்க யோசி. அதி காலை 4 மணிக்கு வருவேன். உன் முடிவைச் சொல்லு.”
“இதுல யோசிக்கிறதுக்கு ஒன்னும் இல்லண்ணா. நீதான் எங்க காதலை வாழ வைக்கணும்.” என்று சொல்லி கண்ணீரோடு அன்ணன் காலில் விழுந்தேன்.
பேசிவிட்டு அண்ணன் போன பின்பு, அப்பாவிடம் அண்ணன் ஏதோ சொல்ல,” அதானே பாத்தேன். தொலைச்சிப் புடுவேன். தொலைச்சு” என்ரு சொல்லியபடியே அவரும் படுக்கப் போக, அண்ணனும் அவன் அறையில் படுக்க….புயலடித்து ஓய்ந்த்து போல, அமைதியானது எங்கள் வீடு.
குடி முழுகின சொகத்தில் எல்லோரும் இருக்க, சாப்பிட பிடிக்காமல் பசியோடவே படுத்துக் கொண்டோம்.
ஆனால், என் நினைவு மட்டும் அலை கடல் போல ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது. தூக்கம் வரவில்லை புரண்டு புரண்டு படுத்தேன். பஞ்சு மெத்தை முள்ளாய் குத்தியது.
விடி காலை 4 மணி.
எங்கள் அறையின் கதவு திறந்தே இருக்க, யாரோ பூனை போல நடந்து வந்து,”ஸ்…ஸ்…ஸ் “என்று சத்தம் கொடுக்க, அது என் அண்ணன் தான் என்று எனக்குப் புரிந்தது. மெதுவாக எழுந்தேன். அம்மாவும் தங்கையும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். ஏற்கனவே என் உடைகள் சிலவற்றையும், என் நகைகளையும் பையில் எடுத்து, மற்றவர் பார்வைக்கு தெரியாதபடிக்கு வைத்திருந்ததை எடுத்துக் கொண்டு பின் வழியாக தெருவுக்கு வர,…. அங்கே சரவணன் கையில் ஒரு பையோடு நின்றிருந்தான்.
சரவணன் கையில் ஒரு பையோடு அங்கே நின்றிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இருவரும் சேர்ந்து அவரவர் வீட்டை விட்டு, ஊருக்குத் தெரியாமல் ஓடிப் போக தயாராகிக் கொண்டிருப்பதை நினைத்து அச்சமாக இருந்தது.
சரவணன் கையில் என் கை பிடித்துக் கொடுத்து, அவன் கையில் சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் தினித்து, அமைதியாக ஆசீர்வாதம் செய்து, கண்களில் கண்ணீரோடு நிற்க,….. அவன் அன்பில் கலங்கி என் அண்ணன் காலில் நான் மீண்டும் விழ, ….என்னோடு சரவணனும் சேர்ந்து விழுந்தான்.
இருவரும் கை பிடித்து இரயில்வே ஸ்டேஷன் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்று. சென்னை ரயிலைப் பிடித்தோம்.
சென்னை செல்லும் இரயில் அப்போதுதான் புறப்படத் தயாராக இருந்தது. சரவணன் என் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓட, …..நான் அவன் பின்னே மூச்சிறைக்க ஓடோடிச் சென்று, முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறினோம்.
நிற்கக் கூட இடமில்லை. கிடைத்த இடைவெளிக்குள் புகுந்து சென்று, எதிர்த்த வாசலின் ஒரமாய் நின்று கொண்டோம். ஆசுவாசப் படுத்திக்கொண்டு naaநான் சரவணனைப் பார்க்க, அவன் என்னைப் பார்த்தான். நல்ல வேளை, நெரிசலான கூட்டத்தில் எங்களைத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.
இரயில், தஞ்சாவூர் ஸ்டேஷனைத் தாண்டி இருந்தது. சூரியன் தன் கதிர்களை லேசாக விரிக்க, பொழுது புலர்ந்தது.
எதையோ இழந்தவன் போல சரவணின் முகம், இருட்டடித்தது போல இருந்தது. என் முகமும் அவனுக்கு அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
“சரவணா, நாம பெத்தவங்களை மதிக்காம, சொந்த பந்தத்தை மறந்து, நம்ம வீட்டை விட்டு ஓடி வந்தது தப்போன்னு இப்ப எனக்கு உறுத்தலா இருக்கு!. உனக்கும், எனக்கும், இப்ப எந்த வருமானமும் இல்லை. நல்லது கெட்டது தெரியாத சின்ன வயசு. எதை நம்பி நாம ஓடிவந்தோம், எதுக்காக ஓடி வந்தோம்னு இப்ப எனக்கு பயமா இருக்கு.”
“வந்தது வந்துட்டோம். இனிமே வாழ்க்கையிலே போராடித்தான் ஜெயிக்கணும். எனக்கு கை வசம் போட்டோ பத்தின அத்தனை வேலையும் எனக்குத் தெரியும். அதை வச்சு நாம எப்படியும் பொழச்சுக்கலாம்கிற தைரியம் எனக்கு இருக்கு. அந்த தைரியத்தை, என் கூடவே இருந்து கடைசி வரைக்கும் கொடுக்கப் போறது நீதான். நீ கொஞ்சம் மனசு கலங்கினாலும், நான் கவுந்துடுவேன். நாம வாழ்க்கையிலே ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.”
“என்ன ஏதுன்னு யோசிக்காமலே, திடு திப்புன்னு ரோஷத்துல, உன் மேல இருக்கிற காதல் மோகத்துல உன் கூட ஓடி வந்துட்டேன். இன்மேல் நாம எப்படி வாழப் போறோம்ங்கிறதை நெனைச்சாவே பயமா இருக்கு.”
“நீ ஒன்னும் பயப் படாதே. என் ஃப்ரன்ட் கல்கத்தாலே இருக்கான். ‘நீங்க வாங்க, உங்களுக்கு வேண்டிய ஹெல்ப் நான் பண்றேன்’னு சொல்லி இருக்கான். அதனாலே கவலைப் படாதே.அப்படி இப்படி கஷ்டப்பட்டு நாம நிமிந்து நிக்கிறவரைக்கும் அவன் நமக்கு உதவியா இருப்பான். நான் கொஞ்சம் பணம் எடுத்துகிட்டு வந்திருக்கேன். என்னை நம்பி வந்த உன்னை, ராணி மாதிரி வச்சி காப்பாத்த வேண்டியது என்னோட பொருப்பு, கடமை.”
கண்களில் கண்ணீர் தளும்ப,…. எதிர்காலம் இருட்டாய்த் தெரிய,…. சரவணனின் மடியில் சாய்ந்துகொண்டேன். நான் இருக்கிறேன் கவலைப் படாதே என்று சொல்வது போல, என் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, என் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தான்.
ஏதேதோ நினைவுகள். பெற்றோரின் நினைவு. சொந்த ஊரின் நினைவு. படித்த பள்ளியின் நினைவு.எதிர்காலத்தைப் பற்றிய பயம். வாழ முடியுமா என்ற கவலை.
இரயில் இரவு சென்னை எக்மோர் ஸ்டேஷனை வந்தடைந்தது. ஆட்டோ பிடித்து சென்ட்ரல் வந்தோம்
அங்கே ஏற்கனவே அவன் நண்பன் ஒருவன் கல்கத்தாவுக்கு டிக்கட் எடுத்து, எங்களுக்காக காத்துக் கொண்டிருக்க, கொஞ்ச நேர ஓய்வுக்குப் பிரகு கல்கத்தா ட்ரெயின் பிடித்தோம். இரயில் கிளம்பியது.
TV பார்த்துக் கொண்டே, கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்த என்னை, வீட்டின் காலிங்க் பெல் சத்தம் நிகழ் காலத்துக்கு இழுத்து வர, எழுந்து சென்று கதவைத் திறந்து பார்த்தால்….அவர்தான்!