இருதயாவுடன் பேசி முடித்த பின்.. தனது இதயத்துக்கே சிறகு முளைத்ததைப் போல உணர்ந்தான் சசி..!! அவனது உம்பெல்லாம் புது ரத்தம் பாய்ந்ததைப் போல ஒரு புத்துணர்ச்சிப் பிரவாகம் அவனுள் பொங்கியது.. !! அவளைப் பற்றி நினைக்கும் போதே அவனது இதயத்துக்கு இதமாக இருந்தது..!! எவ்வளவு இனிமையான பெண் அவள்.. ?? அவளை மனைவியாக அடையப் போகிறவன்.. மிகவும் அதிர்ஷ்டசாலிதான்.. !!
வாட்ஸ் அப்பை ஓபன் பண்ணினான் சசி. இருதயாவின் இதயத்தில் இடம் பிடித்தவனின் போட்டோ வந்தது. மூன்று போட்டோக்களை அனுப்பியிருந்தாள். அதில் ஒன்று இருவரும்.. ஜோடியாக எடுத்துக் கொண்ட செஃல்பி.. !! மிகவும் நெருக்கமாக.. கன்னமும்.. கன்னமும் உரசிக் கொள்ளுமளவுக்கு இருந்தது.. !!
இருதயாவுக்கு இப்போது கொஞ்சம் உடம்பு வந்திருப்பதைப் போலிருந்தது. ஒட்டடைக் குச்சி போல.. வெடவெடவென இருந்தவள்.. இப்போது கொஞ்சம் சதை போட்டு.. கன்னம் எல்லாம் உப்பி.. மெருகேறியிருந்தாள். மெல்லிய அவளின் சிவந்த இதழ்களில் லிப்ஸ்டிக்கை உறுத்தாமல் பூசியிருந்தாள். அவளின் ஷார்ப்பான மூக்கு எடுப்பாக தெரிந்தது. ஸலீவ்லெஸில் ஒரு ரெட் கலர் டாப்ஸ். ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி.. அவளது தோற்றத்தையே மாற்றியிருந்தாள்.. !!
அவள் இதயத்தில் இடம் பிடித்தவனும்.. அவளைப் போலவே நிறமாக.. குண்டு எனச் சொல்ல முடியாத அளவுக்கு.. மீடியமான உடம்புடன்.. நன்றாக இருந்தான்.. !!
‘ஹவ் இஸ் இட்..?’ என்று வாட்ஹ் அப்பில் கேட்டாள் இருதயா.
‘வெரி ஸ்மார்ட். நைஸ் லுக்.! ஜோடி பொருத்தம் அற்புதம்..!’ என்று அனுப்பினான்.
‘ தேங்க் யூ ஸோ மச்..! அவனை புடிச்சிருக்கா ?’
‘ ம்.. ம்ம். உன் இதயத்தை திருடினவன். பிடிக்காம இருக்குமா..?’
‘ ஹேய்..! ம்..ஓகே. ! தேங்க்ஸ். அப்பறம் உங்க ஸ்வீட் ஹார்ட்டோட போட்டோ எனக்கு செண்ட் பண்ணுங்க.’
புவியுடன் சேர்ந்து ஜோடியாக எடுத்துக் கொண்டது சசியிடம் எதுவும் இல்லை. எல்லாம் தனித் தனிப் படங்கள்தான். அதில் இருந்து மார்புவரை மட்டும் தெரியும் ஒரு படத்தை அனுப்பினான். !!
‘ வாவ்.. செம க்யூட்டா இருக்காங்க. ஷி இஸ் வெரி லக்கி..!’
அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் வாட்சப்பில் பேசிக் கொண்டிருந்த பின் ‘குட் நைட் ‘ சொல்லி கட் பண்ணினான்.. !!
மீண்டும் சிறிது நேரம் மாடியில் நடந்தபடியே இருதயாவின் படத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சசி. ஒருவேளை இவள் மட்டும் கிரிஸ்டியனாக இல்லாவிட்டால்.. இவளைத்தான் திருமணம் செய்து கொண்டிருப்பேன் என நினைத்தான் சசி. அப்படி நினைத்தபோதே அவன் நெஞ்சுக்குழி எல்லாம் இனித்தது.. !!
பழைய இதயத்தில் தங்கிய பழைய நினைவுகளை அசை போட்டபடி நீண்ட நேரம் மொட்டை மாடியிலேயே நின்றிருந்தான். அப்பறம் விசில் அடித்தபடி இறங்கி கீழே போனேன். குமுதாவின் குழந்தைகளுடன் செல்லச் சண்டை போட்டு.. விளையாடினான். குமுதா கொடுத்த இரவு உணவை சாப்பிட்டு விட்டு.. வீடு திரும்பினான்.. !!
சசி வீட்டுக்குப் போனபோது.. புவியும் அவளது அம்மாவும் வீட்டுக்கு வெளியே சேர் போட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்..!
” என்னது ரெண்டு பேரும் வெளிய வந்து உக்காந்துட்டிங்க. ?” வண்டியை நிறுத்தி இறங்கிக் கொண்டே கேட்டான் சசி.
” சும்மா.. தூக்கம் வரவரை அப்படியே உக்காந்துட்டோம்ப்பா ” புவியின் அம்மா சொன்னாள்.
புவி சிரித்தபடி இரு கைகளையும் உயரத் தூக்கி சோம்பல் முறித்தாள். புவியின் அம்மா வெற்றிலை போட்டிருந்தாள்.
” கவிய காணம்.? பாப்பா தூங்கிருச்சா. ?”
” பாப்பா தூங்கி ரொம்ப நேரம் ஆகிப் போச்சு. கவி உள்ள இருக்கா.”
சசி சாவியை எடுத்து பூட்டைத் திறந்தான்.
” நான் கொஞ்ச நேரம் டிவி பாக்கறேன்மா ” என்று சிரித்தபடி எழுந்தாள் புவி.
அவள் அம்மாவும் கூடவே எழுந்தாள்.
”நானும் கொஞ்ச நேரம் நாடகம் பாக்கறேன்..! போட்டு விடு சசி.. !!”
அம்மாவைக் கடுப்பாகப் பார்த்தாள் புவி.
” நீ எப்பருந்துமா நாடகம் எல்லாம் இந்தளவுக்கு பாத்து பழகின.. ?”
” ஏன்டி. நீ பாக்கலாம். நான் பாக்க கூடாதா. ? இப்ப வீட்லயேதான இருக்கேன். வேற என்ன வேலை..?”
அம்மா மகள் இரண்டு பேரும் உள்ளே வந்தார்கள். புவி போய் டிவியைப் போட்டு விட்டாள். ரிமோட்டைக் கையில் எடுத்துக் கொண்டு போய் கட்டிலில் உட்கார்ந்து ஒரு காலை மட்டும் மடக்கி வைத்தாள். அவள் அம்மா சேரில் உட்கார்ந்தாள்.
” ஏன்க்கா.. மாப்பிள்ளை இருக்காருனு அங்க நாடகம் பாக்க முடியலியா..?” சசி சிரித்தபடி கேட்டான்.
” ஆமாப்பா.. அவரும் டிவிதான் பாத்துட்டு இருக்காரு.”
சசி சட்டையைக் கழற்றி மாட்டினான். புவியைப் பார்த்தான். அவள் உதட்டைப் பிதுக்கிச் சிரித்தாள். அவள் அம்மாவை வாய்க்குள் ஏதோ சொல்லித் திட்டினாள். புன்னகையுடன் அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கட்டலில் சாய்ந்து கொண்டான் சசி.. !
சீரியல் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும் சசியின் வீட்டில் அவன் கல்யாண விஷயமாக என்ன சொல்கிறார்கள் என்றுதான் கேட்டுக் கொண்டிருந்தாள் புவியின் அம்மா.. !!
சசியைக் காதலாகவும்.. தனிமை கிடைக்கவில்லையே என்று ஏககமாகவும் அடிக்கடி பார்த்தக் கொண்டிருந்தாள் புவி. அவனுக்குக் கூட அவளை மடியில் இழுத்துப் போட்டுக் கொஞ்ச வேண்டும் போல்தான் இருந்தது.. !! ஆனால் புவியின் அம்மா இருப்பதால்.. அப்படி எதுவும் செய்யவில்லை.. !!
ஒரு வழியாக நாடகம் எல்லாம் முடிந்த பிறகு எழுந்து..
”வாடி போய் படுக்கலாம்.” என்றாள் புவியின் அம்மா.
புவி எழுந்து டாடா காட்டி ”குட்நைட் ” எனச் சொல்லி விட்டுப் போய் விட்டாள்.
சசி பாத்ரூம் போய் வந்து கதவைச் சாத்திப் படுத்தான்.. !! கவியும் அவள் அம்மாவும் வீட்டிலேயே இருப்பதால்.. புவியுடன் ஜாலியாக இருக்கும் தனிமையான வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிதாகிக் கொண்டிருந்தது.. !! அடுத்த நாளும்.. அதற்கு அடுத்த நாளும்.. இருயாவைப் பற்றி.. புவியிடம் சொல்லலாம் என நினைத்தாலும்.. சொல்வதற்கான நேரம் அமையாமல் அப்படியே தவிர்த்து விட்டான். !!
”சொல்லு நண்பா.. என்கிட்ட என்னமோ சொல்லனும்னு சொன்னியே.. ?” என்றான் காத்து.
இரண்டு நாட்கள் கழித்து.. காத்துவும்.. சசியும் மட்டும் சந்தித்து பாருக்குச் சென்று உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். ஆளுக்கு ஒரு ரவுண்டு இறக்கியிருந்தார்கள்.. !!
” அத அப்றம் சொல்றேன். இரு.. அதுக்கு முன்ன இன்னொரு மேட்டர் இருக்கு..” என்று சசி மொபைலை எடுத்து.. வாட்சப் ஓபன் பண்ணி.. இருதயா அனுப்பிய படங்களை காத்துவுக்கு காண்பித்தான்.
” எப்படி இருக்கு.. ??”
இருதயாவைப் பார்த்த காத்து.. ”குடு இப்படி ” என்று மொபைலைக் கையில் வாங்கி உற்று உற்றுப் பார்த்தான்.
” யார்ரா இது.. ? அந்த.. அந்த.. கிரிஸ்டியன் புள்ளதான.. ?”
” ம்.. ம்ம்.. ” புன்னகைத்தான் சசி.
” இது பேரு என்ன.. ? சட்னு வர மாட்டேங்குது.. ! மறந்து போச்சு.. !”
” இருதயா.. !”
” கரெக்ட்.. கரெக்ட்.. இருதயா..! ஆள் இப்ப சூப்பரா இருக்குடா.. மொதவே நல்ல பிகருதான். இப்ப கொஞ்சம் ஒடம்பு வந்த மாதிரி இருக்க. ! இவன் யாரு.. கூட..? கல்யாணமாகிருச்சா.. ?”
” இன்னும் கல்யாணம் ஆகல. ஆனா.. ஆகிரும். ! இவனைத்தான் லவ் பண்ணிட்டு இருக்காம்.. !!”
” இன்னும் டச்சுலதான் இருக்கா உனக்கு ?”
” எடைல கொஞ்சம் கேப் ஆச்சு. இப்ப மறுபடி இங்க… ஊட்டிக்கு வந்துருக்கு. அதுவே என் நெம்பருக்கு கால் பண்ணி பேசுச்சு.. அப்போதான் கல்யாண மேட்டர் எல்லாம் பேசி.. இந்த போட்டோ அனுப்பி இவனை லவ் பண்றதா சொல்லுச்சு.. ”
” ம்.. ம்ம்..! சூப்பர். ஆளு இவனும் நல்லாத்தான் இருக்கான். ! ஆமா நீ இதை லவ் பண்ணதான.. கொஞ்ச நாளாச்சும். ? இப்பவாச்சும் உண்மையை சொல்லு நண்பா.. ?”
சிரித்தான் சசி ”லவ் எல்லாம் இல்லை நண்பா. அது ரொம்ப நல்ல புள்ள.. எல்லாரு கூடயும் எதார்த்தமா பழகும். என்கிட்ட இன்னும் கொஞ்சம் அதிகம்.. கொஞ்சம் க்ளோஸ் பிரெண்டா பழகுச்சு.. ”