அதேபோல் பகல் முழுவதும் தனது அறையிலேயே மகளை வைத்துக் கொண்டாள் ….. இரவு வந்ததும் மாடிக்கு வரும் மான்சிக்கு வழக்கம் போல அதிகாலையில் போன் செய்து பல நிமிடங்கள் வரை பேசினாள் …. எரிச்சலாக வந்தது சத்யனுக்கு ….
மகள் மீது பாசம் இருக்க வேண்டியது தான் … அதற்காக இப்படியா ? என்று வாசுகியும் மதியும் கேட்கும் அளவிற்கு பவானியின் நடவடிக்கைகள் இருந்தன …. மான்சியிடம் காபி போடும்படி கூறினால் கூட உதவிக்கு பவானியும் சென்றாள் ….இவ்வளவு பாலுக்கு இத்தனை ஸ்பூன் சர்கரையும் காபித்தூளும் கலக்க வேண்டும் என்று கூறிவதைக் கண்டு எல்லோரும் வியந்தனர் ….
இப்படி கூட ஒன்றும் தெரியாமல் மகளை வளர்ப்பார்களா? என்ற கேள்வி கேள்வியாகவே இருந்தது …. ஆறாவது நாள் காலை உணவின் போது டைனிங் ஹாலுக்கு வந்த ஆதி அங்கே பவானி இல்லாததைக் கண்டு வாசுகியைப் பார்க்க…. ” அவங்க வீடு லீசுக்கு விடுறது விஷயமா பேசப் போயிருக்காங்க ஆதி ” என்றாள் …
” ம் ம் … ” என்றவன் தனதருகே அமர்ந்திருந்த சத்யனின் தோளில் இடித்து ” மான்சியோட மொபைலை சுவிட்ச் ஆப் பண்ணி வைடா மச்சி ” என்றான் … சத்யன் குழப்பாகப் பார்க்க…. ” சொன்னதை செய் மச்சி ” என்று ரகசியமாக அதட்டியதும் மேசையிலிருந்த மொபைலை நைசாக எடுத்து அணைத்து வைத்தான் சத்யன் …. எல்லோருக்கும் இட்லி பரிமாறப்பட்டது ….
சத்யனின் அருகில் அமர்ந்திருந்த மான்சி ஐந்து இட்லி சாப்பிட்டு முடித்து விட்டு எதிரேயிருந்த பாத்திரத்திலிருந்து மீண்டும் ஐந்து இட்லிகளை எடுத்து தனது தட்டில் வைத்துக்கொண்டு உண்ண ஆரம்பித்தாள் …. அத்தனை பேரும் திகைப்புடன் பார்க்கும் போதே பனிரென்டாவது இட்லியை உண்டு முடித்த மான்சி வயிறு கொள்ளாமல் ஓங்கரிக்க ….. சத்யன் அவசரமாக எழுந்து அவளை வாஸ்பேஷினுக்கு அழைத்துச் சென்றான் ….
உண்டதை மொத்தமும் வாந்தியெடுத்தாள் ….. சத்யன் ஒன்றும் புரியாமல் நின்றிருந்தான் …. ஏன் இத்தனை இட்லிகளை உண்டாள் ? ஏன் அது மொத்தத்தையும் வாந்தியெடுத்தாள் ? நண்பனின் தோளில் கை வைத்த ஆதி …. ” மான்சிய மாடிக்குக் கூட்டிட்டுப் போய் உன்கூடவே வச்சுக்கோ … மறந்தும் மொபைலை ஆன் பண்ணாத ” என்றதும் யோசனையுடன் சரியென்று தலையசைத்துவிட்டுச் சென்றான் சத்யன் ….
போகும் நண்பனையும் அவன் மனைவியையும் பார்த்துக்கொண்டிருந்த ஆதியின் தோளில் கை வைத்தாள் வாசுகி … ” ஆதி ,, இந்த பொண்ணுக்கு என்னடா ஆச்சு …? அவளோட நடத்தையே புரியமாட்டேங்குது ஆதி…. அம்ருதாவை கூட அவங்க அம்மா சொன்னா மட்டும் தான் தூக்கி வச்சுக்கிறா …. சத்யன் கூட எப்புடியிருக்கான்னு ஒன்னும் புரியலையே ” என்றாள் கவலையாக….. திரும்பிப் பார்த்துச் சிரித்த ஆதி ” சீக்கிரமே புரிஞ்சிடும்க்கா … நீங்க கவலைப்படாதீங்க ” என்றுவிட்டு தனது அறைக்குச் செல்வது போல் சட்டென்று பவானியின் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான் …..
அடுத்த அரை மணிநேரம் கழித்து அங்கிருந்து வெளியே வந்தவனின் முகத்தில் சிந்தனையின் முடிச்சுகள் …. ஐந்தே நாட்களில் மான்சி அந்த வீட்டிற்கு பெரும் கேள்விக் குறியாக மாறியிருக்க …. படுக்கையில் உறங்கியவளை பக்கத்தில் சேர் போட்டு அமர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யன் …. ” இவளுக்கு என்னதான் பிரச்சனை? திருமணத்திற்கு முன்பு யாரையாவது காதலித்து அதனால் என்னுடன் ஒட்டாமல் இருக்கிறாளா? ” என்று தனக்குத் தானேக் கேட்டுக் கொண்டான் ….
” அப்படியிருந்திருந்தால் உறவுக்கு ஒத்துழைத்திருக்க மாட்டாளே ? என்னுடன் மனம் விட்டு பேசவில்லையேத் தவிர மற்ற அனைத்தும் சரியாகத்தானே செய்கிறாள் ?” ஒன்றும் புரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டான் …. பனிரெண்டு மணியளவில் வீட்டிற்கு வந்த பவானி தன் மகளைத் தேடி மாடிக்குச் செல்ல படியேறும் போது குறுக்கே வந்துத் தடுத்த ஆதி ….
” மான்சி சத்யன் ரூம்ல தூங்குறாங்க ஆன்ட்டி … நீங்க போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க ” என்றான் … சத்யனின் அறையைப் பார்த்தபடி தவிப்புடன் ” இல்ல அவட்ட பேசனும் ” என்றாள் கலங்கிய குரலில் … ” பரவால்ல ஆன்ட்டி … நாளைக்குப் பேசுங்க … புதுசா மேரேஜ் ஆனவங்க … தனியா இருக்கட்டும் ” என்றவன் அதோடு நிற்காமல் பவானியின் கையைப் பிடித்து அழைத்து வந்து அவளது அறையின் வாயிலில் விட்டுவிட்டுச் சென்றான் …. அன்று மதிய உணவு சத்யனின் அறைக்கே கொடுத்தனுப்பும் படி வாசுகியிடம் கூறினான் மதி ….
அவளுக்கும் அதுவே சரியென்று தோன்றியது …. பவானிதான் தவித்துப் போனாள் …. ஆதியை மீறி மாடியேறிச் சென்று மான்சியை அணுகமுடியவில்லை …. இரவு உணவுக்காகக் கூட கீழே வரவில்லை என்றதும் கலங்கிய கண்களுடன் தனது அறைக்குப் போய்விட்டாள்.அன்று இரவு ஏனோ மான்சியைத் தொட விருப்பமின்றி தனித்துப் படுத்திருந்தான் சத்யன் …. இத்தனை நாட்களாக வந்ததும் அவனை முத்தமிட்டு அழைப்பவள் இன்று எதுவும் செய்யாமல் படுத்துக் கொண்டாள் …
முதன் முறையாக சத்யனுக்கு சந்தேகம் வந்தது …. அம்மா சொல்லாததால் இன்று என்னைத் தொடவில்லையா? அப்படியானால் இந்த ஐந்து நாட்களும் அவளது அம்மா கூறியதால் தான் உறவு நடந்ததா ? ஒரு மாதிரி அருவருத்துப் போனான் சத்யன் …. அமைதியாக உறங்குபவளைப் பார்த்தபடி அருகேப் படுத்துக் கொண்டான் …. எத்தனை கனவுகளுடன் ஆரம்பித்த கல்யாண வாழ்க்கை … இப்படி ஐந்தே நாளில் அலுத்துவிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை ….
நெடுநேரம் வரை உறக்கம் வராமல் தவித்தவன் எப்போது உறங்கினான் என்றே தெரியவில்லை ….. நல்ல உறக்கத்தில் ஐந்து நாள் பழக்கமாக மனைவியின் ஞாபகத்தில் அணைப்பதற்காக தூக்கத்திலேயே கையை நீட்டி படுக்கையைத் தடவினான் … ஜில்லென்ற எதிலோ கைப் பட சட்டென்று தூக்கம் கலைந்து திரும்பிப் பார்த்தான் …. விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் படுக்கையின் விரிப்பில் ஈரமிருப்பதைக் கண்டான் ….
பெட் எப்படி தண்ணியாச்சு ? ஒன்றும் புரியாமல் எழுந்து லைட்டைப் போட்டுவிட்டுப் படுக்கையைப் பார்த்தவன் அதிர்ந்து போனான் ….. மான்சிப் படுத்திருந்த பகுதி மொத்தமும் நனைந்து போயிருந்தது …. சிறு குழந்தை போல் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து விட்டு அதன்மீதே படுத்திருந்தாள் … ” ஏய் ச்சீ ……. ” என்று உரக்கக் கத்திவிட்டான் சத்யன் ….. அருவருப்புடன் சுவற்றை ஒட்டி நின்றுகொண்டான் ….
வெறுப்புடன் தனது தலையில் அடித்துக் கொண்டு சோபாவில் சென்று அமர்ந்தவன் அதன் பிறகு பொட்டுக் கூட உறங்கவில்லை …. படுக்கையைப் பார்க்கும் போதெல்லாம் அருவருப்பில் கூசிப் போனான் …. இதை எப்படி உணராமல் கிடக்கிறாள் ? இதுதான் இவளது பழக்கமா? இந்த ஐந்து நாட்களாக தாயின் வழி நடத்தலில் இது தவிர்க்கப்பட்டிருந்ததா ? அக்காவுக்கும் மாமாவுக்கும் இது தெரிஞ்சா ரொம்ப வேதனைப்படுவாங்களே என்று கலங்கினான் ….
கல்யாண வாழ்வே கசந்து போனது விடிய விடிய விழித்திருந்தவன் விடிந்தப் பிறகு மான்சியை தட்டியெழுப்பினான் …. கண்களை கசக்கிக் கொண்டு விழித்தவளுக்கு படுக்கையை விரல் நீட்டிச் சுட்டிக் காட்டினான் ….. புரியாமல் படுக்கையைப் பார்த்தவள் வெகு சாதாரணமாக சத்யனைப் பார்த்தாள் …. இதுவும் சத்யனுக்கு அதிர்வுதான் …இது எப்படி சங்கடத்தைக் கொடுக்காமல் போனது ?
நன்றி:-சத்யன்